ஜிஎஸ்எல்வி
ஜி.எஸ்.எல்.வி., பயணம் தோல்வி: செயற்கைக்கோளை செலுத்த முடியவில்லை
ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான, கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட சிறிய கோளாறினால் ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டரை நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லாமல் பாதை மாறிய ராக்கெட், பின்னர் கடலில் விழுந்தது. ‘அடுத்த ஆண்டு சரியாக இதே நாளில் திட்டமிட்டபடி ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும்’ என, ‘இஸ்ரோ’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவு திட்டமான ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், கடந்த 7ம் தேதி சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன் டவுண், நேற்று முன்தினம் காலை 11.27க்கு துவங்கியது. தொடர்ந்து 29 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு, நேற்று மாலை சரியாக 4.27 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சரியான அளவில் பயணத்தை துவக்கிய இந்த ராக்கெட், அடுத்த இரண்டரை நிமிடத்தில் அதன் பாதையில் இருந்து விலகி மாயமானது. இதனால், ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் தோல்வியில் முடிந்தது.
இது குறித்து, ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், திட, திரவ, அதிக குளிர்தன்மையுள்ள கிரையோஜெனிக் என மூன்று பாகங்களை உடையது. ராக்கெட் செலுத்தப்பட்ட போது மூன்று நிலைகளுமே சிறப்பாக செயல்பட துவங்கியது. அடுத்த இரண்டரை நிமிடத்தில் மூன்றாவது நிலையில் இருக்கும் கிரையோ ஜெனிக் பகுதியில் உள்ள இரண்டு சிறிய ரக இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே ராக்கெட் தோல்விக்கு காரணமாக இருக்கும் என சந்தேகம் உள்ளது. இது குறித்த உறுதியான முடிவை விஞ்ஞானிகளின் விரிவான ஆய்வுக்கு பின்னரே அறிவிக்க முடியும். ராக்கெட் தோல்வியடையத் துவங்கிய அடுத்த வினாடியில் இருந்தே இதற்கான பணியினை துவக்கி விட்டோம். ராக்கெட் தோல்வியால் விஞ்ஞானிகளின் 18 ஆண்டு கால முயற்சி தோல்வியடைந்து விட்டதாக கருதத் தேவையில்லை. தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சரிசெய்து அடுத்தாண்டு உறுதியாக இதே நாளில் ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும். இவ்வாறு, ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏற்கனவே இரு முறை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போது அந்த ராக்கெட்டில் ரஷ்ய தயாரிப்பான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் மூலம் உருவாக்கப்பட்ட மூன்றாவது ராக்கெட் நேற்று தோல்வியில் முடிந்தது.
குவிந்தனர் விஞ்ஞானிகள்: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் செலுத்தப் பட்டதை உலகமே உற்று நோக்கியதால் விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே பதட்டமாக காணப்பட்டனர். முதல்நிலையை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததால் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், ராக்கெட் தோல்வி என தெரிந்ததும், விஞ்ஞானிகள் மத்தியில் அமைதி நிலவியது. ‘இஸ்ரோ’வின் அழைப்பின் பேரில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் ‘இஸ்ரோ’வின் முன்னாள் தலைவர்கள் கஸ்தூரிரங்கன், மாதவன் நாயர் உள்ளிட்ட ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் ராக்கெட் செலுத்தப்படுவதை கண்காணித்தனர். ராக்கெட் ஏவப்படுவதை அறிந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ராக்கெட் ஏவுதளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருந்தனர். ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணனும், திட்ட இயக்குனர் முஸ்லிமும் ஆலோசனை நடத்தினர்.
ராக்கெட்டில் இருந்தவை! இதற்கு முன்பு அனுப்பப்பட்ட ஐந்து ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்களிலிருந்து, தற்போது அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் முற்றிலும் மாறுபட்டது. காரணம், முன்பு அனுப்பப்பட்டவை எல்லாம் ரஷ்ய தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை. இது, முற்றிலும் உள்நாட்டுச் சரக்கு. அது மட்டுமல்லாமல், முதல் முறையாக ராக்கெட்டில், அதிநவீன மிஷன் கம்ப்யூட்டர்களும், தட்பவெப்பத்தைக் கணித்து, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பும் அதிநவீன இயந்திரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள, ‘ஜி-சாட் 4′ செயற்கைக்கோள், 1,022வது வினாடியில், நீள்வட்டச் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து, 720 வினாடிகள் கிரையோஜெனிக் இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோளின் நீள்வட்டச் சுற்றுப்பாதை, பூமியிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 170 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 36 ஆயிரம் கிலோ மீட்டரும் கொண்டதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில், இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று, ‘கா’ பேண்ட்; மற்றொன்று, ‘ககன்’ பேண்ட்.
‘கா’ பேண்ட் தகவல் தொழில்நுட்பத்துக்கானது. டி.டி.எச்., – ஏ.டி.எம்., போன்ற சேவைகளை மிகத் துல்லியமாகவும், விரைவாகவும் பெற்றிருக்க முடியும். ‘ககன்’ பேண்ட், தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்தை நெறிமுறைப்படுத்துவதற்கானது. இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து, இந்தச் செயற்கைக்கோள், படங்களையும், தகவல்களையும் அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 8.657 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் விட்டமும் கொண்ட உலோகத்தின் மூலம், செயற்கைக்கோளும், ராக்கெட்டிலுள்ள எலக்ட்ரானிக் உபகரணங்களும் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருந்தால், அச்சாதனையின் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் எதுவும் சாத்தியம் என்ற நிலையை எட்டிய, ஆறாவது நாடாக இந்தியா உயர்ந்திருக்கும்
‘துவண்டுவிட மாட்டோம்; வெற்றி பெறுவோம்’: ”ஜி.எஸ்.எல்.வி., தோல்வியில் நிச்சயமாக எந்த சதிதிட்டமும் இல்லை; தவறுகளை ஒரே ஆண்டில் சரிசெய்து முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவாகும் ஜி.எஸ்.எல்.வி., கிரையோஜெனிக் ராக்கெட்டை விண்ணில் ஏவுவோம்,” என ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி., திட்டம் வெற்றியடையவில்லை என, அறிவிப்பதில் வருத்தப்படுகிறேன். திட்டமிட்டபடி நேற்று மாலை 4.27 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அதற்கு முன், 29 மணி நேர கவுன் டவுணும் எந்த சிக்கலும் இன்றி சரியானபடியே நடந்தது. ராக்கெட் ஏவப்படும்போது ஜி.எஸ்-2 என்ற இறுதிக் கட்டத்தை 293வது வினாடியில் அடைந்தபோது, ராக்கெட் தள்ளாடுவதை உணர்ந் தோம். என்ன காரணம் என, கண்டறியும் முன் ராக்கெட் திசைமாறி கடலில் விழுந்தது. முதலில் கிடைத்த தகவலின்படி, சிறிய ரக கிரையோஜெனிக் இயந்திரம்தான் இயங்கவில்லை என யூகித்தோம். தற்போது கிடைத்த தகவலின் படி, பிரதான கிரையோஜெனிக் இயந்திரமே இயங்கவில்லை என, தெரியவந்துள்ளது. இருந்தாலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது. விரிவான ஆய்வுக்கு பிறகே உறுதியான முடிவை எடுக்க முடியும். இரண்டு, மூன்று நாட்களில் ஆழமான ஆய்வு மேற் கொண்ட பின் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, அதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி திறமையான எங்கள் குழு கண்டறியும். பழைய தவறுகளை ஒரே ஆண்டில் சரிசெய்து, முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவாகும் ஜி.எஸ்.எல்.வி., கிரையோஜெனிக் இயந்திர ராக்கெட்டை விண்ணில் ஏவுவோம். கிரையோஜெனிக் இயந்திரத்தை தரையில் வைத்து முழுமையான சோதனை மேற்கொண்டோம். அவற்றில் வெற்றியே கிடைத்தது. சில சோதனைகளை விண்ணில் ஏவும்போதுதான் மேற்கொள்ள முடியும். அதனால் தான் இந்த சிக்கல் எழுந்தது.
கிரையோஜெனிக் தொழில் நுட்பம் மிகவும் சிக்கலான ஒன்று. இதை அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட எங்கள் விஞ்ஞானிகள் அல்லும், பகலும் அயராது பாடுபட்டு மீண்டும் வெற்றிகரமாக கொண்டு வருவோம். முதலில் ஏவப் பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கூட தோல்விதான் அடைந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து 15 வெற்றிகளைப் பெற்றது. அதுபோல், இப்போது இந்திய தொழில் நுட்பத்தில் தயாரான ஜி.எஸ்.எல்.வி., டி3 தோல்வியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் வெற்றியைத்தான் பெறுவோம். முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாராகும் அடுத்த ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை ஏவுவதற்கு முன், ரஷ்யா நமக்கு இன்னும் தர வேண்டிய கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் அடுத்தடுத்த செயற்கைக்கோள் களை அனுப்புவோம். வரும் செப்டம்பர் மாதம் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்திற்கு உதவக்கூடிய ‘ஜி-சாட் 5பி’ விண்ணில் ஏவப்படும். அதன்பிறகு ‘ஜி-சாட் 6′ ஏவப்படும். என்னதான் நமக்கு ரஷ்ய தொழில்நுட்பம் கிடைத்தாலும், நாம் நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். இரண்டாது ரஷ்ய ராக்கெட்டை வாங்குவதை விட நாம் சொந்தமாக ராக்கெட் தயாரித்தால் பாதியளவே செலவாகும். இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. கடமையைச் செய், பலனை எதிர்பார்க் காதே என்பதைப் போல தொடர்ந்து எங்கள் கடமையை வெற்றிகரமாக செய்வோம். ஜி.எஸ்.எல்.வி., டி3 ராக்கெட் தோல்வியில் நிச்சயமாக எந்த சதியும் இல்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
வழக்கமாக ராக்கெட் ஏவியவுடன் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்திக்கும்போது, ஒட்டுமொத்த குழுவினரையும் மேடையில் அமர வைத்து சந்திப்பது வழக்கம். ஜி.எஸ்.எல்.வி., திட்டம் தோல்வியடைந்ததால், நிருபர்களின் கேள்விக் கணைகளால் விஞ்ஞானிகள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, இஸ்ரோ தலைவர் தனியாகவே நிருபர்களை சந்தித்தார்.